ஏழைகளை ஏகடியம் செய்யலாமா பிரதமரே? – இடும்பாவனம் கார்த்திக்

0
589

ஏழைகளை ஏகடியம் செய்யலாமா பிரதமரே? – இடும்பாவனம் கார்த்திக்

இனி 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் ஒற்றை அறிவிப்பின்மூலம் ஒட்டுமொத்த இந்திய மக்களும் துன்பங்களுக்கு ஆளாகி நிற்க, நம் பிரதமரோ அடுத்த நாளே விமானத்தைப் பிடித்து ஜப்பானுக்குப் போய்விட்டார். அங்கு என்னப் பேசினார் என்று பார்ப்பதற்கு முன்பு, அதற்குப் பிறகான நாட்களில் நடந்த கோவா விமான நிலைய அடிக்கல் நாட்டுவிழாவில் பேசியதைப் பார்ப்போம்.

கோவாவில் பேசிய பிரதமர் மோடி மிகவும் உணர்ச்சிவயப்பட்டவராக இருந்தார். நாட்டு மக்களுக்காக தான் குடும்பத்தைத் துறந்திருப்பதாகவும், நாட்டின் நலனுக்காக தன் உயிரையும் தியாகம் செய்யத் தயாராக இருப்பதாகவும் நெக்குருகினார். இடையிடையே தனது கண்ணீரை உதிர்க்கவும் தவறவில்லை. நமது பிரதமருக்குத்தான் நாட்டின் மேல் எவ்வளவு அக்கறை என்று மெச்சலாம் என்றால், மோடியின் ஜப்பான் உரை கண்முன்னே வந்துபோகிறது. ‘நான் ஏழைகளின் துயரறிந்தவன்’ என மூச்சுக்கு முந்நூறு தடவைசொல்லும் பிரதமர் மோடி ஜப்பானில் பேசியது என்ன தெரியுமா? இதற்கு முற்றிலும் நேர்மாறானது. ஜப்பானில் அவரது உரையில் ஒரு இடத்தில்கூட ஏழைகள் படும் இன்னல்களையோ, துயரங்களையோ குறிப்பிடவில்லை. மாறாக எள்ளி நகையாடினார். அவரது உரையில் ஒரு இடத்தில் ‘வீட்டில் திருமணம் இருக்கும்; கையில் காசு இருக்காது’ என்றார். திருமணம் செய்வதற்கு கையில் பணம் இருக்காது என மோடி குறிப்பிட்டது யாரை? யார் வீட்டுத் திருமணம் காசு இல்லாது நின்றது? அம்பானி வீட்டுத்திருமணமா? அதானி வீட்டுத் திருமணமா? இவ்வளவு திண்டாட்டங்களுக்கு நடுவேயும் கற்பனைகூட செய்து பார்க்க முடியாத அளவுக்கு ஏறக்குறைய 650 கோடி ரூபாய் பொருட்செலவில் பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தனன் ரெட்டி தனது மகளுக்கு திருமணம் நடத்தினாரே, அவரை மோடியின் ‘துல்லிய தாக்குதல்’ எந்தவிதத்திலும் பாதிக்கவில்லையே? அப்புறம் யார் வீட்டுத்திருமணத்தை மோடி குறிப்பிட்டார்? யார் பாதிக்கப்பட்டார்?

 

ஓய்வு, உறக்கமில்லாது உழைத்து, உடல்முழுவதும் வியர்வையில் நனைய பாடுபட்டு, வயிற்றைக் கட்டி, வாயைக் கட்டி குருவி சேர்ப்பது போல சிறுக சிறுகச் சேர்த்து சம்பாதித்த பணத்தைக் கொண்டு மகளுக்குத் திருமணம் நிச்சயித்துவிட்டு மோடி அரசின் திடீர் அறிவிப்பால் செய்வதறியாது தவித்து நிற்கும் ஏழைகளும், நடுத்தர வர்க்கமும்தானே? அவர்களை இந்த நிலைக்கு ஆளாக்கிய பிரதமரே அவர்களது நிலையை கேலிசெய்து பேசுவது  கயமைத்தனமில்லையா? அவர்களை ஏகடியம் செய்யத்தான், ‘டீ விற்ற ஏழை’ என்று சொல்லிக்கொண்டு ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தீர்களா பிரதமரே? தனது மக்களின் தேவையறிந்து சேவைசெய்ய வேண்டிய இடத்தில் இருந்துகொண்டு அவர்களது துயரை துச்சமென நினைத்து நகைப்பது அறம்தானோ 56 இஞ்ச் மார்பரே?

  • இடும்பாவனம் கார்த்திக்

LEAVE A REPLY