கறுப்புப் பண ஒழிப்பா? கண்துடைப்பா? -மதிமுகிலன்

0
840

கறுப்புப் பண ஒழிப்பா? கண்துடைப்பா?

-மதிமுகிலன்

நவம்பர்  8 நள்ளிரவு முதல்  500  மற்றும்  1000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவை என்ற அறிவிப்பை மத்தியில் ஆளும் பாஜக மோடி அரசு வெளியிட்டது. ஒரே இரவில், ரூபாய் 14  இலட்சம் கோடி ரூபாய், அதாவது பணச் சுழற்சியின் பணமதிப்பில் 86 சதம் பயனற்றது ஆகிப் போனது. கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக இந்த அறிவிப்பு அடையாளம் காட்டப்பட்டது. ஆனால், உண்மையோ இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.

பணம் செல்லாதது என்று இந்தியாவில் அறிவிக்கப்பட்டது இது முதன்முறையல்ல. சுதந்திரம் பெறுவதற்கு முன்பு ரூபாய்  1000 மற்றும்  10 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாதவை என்று  1946-இல் அறிவிக்கப்பட்டு பின்னர்,  1954-இல் ஆயிரம், ஐந்தாயிரம்,  பத்தாயிரம் என்ற ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டன.

முதலில் கறுப்புப் பணம் என்றால் என்ன?  என்று பார்ப்போம்.

அரசாங்கத்திற்கு கணக்கு காண்பிக்காமல் ஒருவர் ஈட்டும் பணமே கறுப்புப் பணம். அரசாங்கத்திற்கு கணக்கு காண்பிக்காமல் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். பணம் தவறாவன வழியில் ஈட்டப்பட்டதாக இருக்கலாம்;  வரி ஏய்ப்புக்காகவும் இருக்கலாம்.

முந்தைய காலத் திரைப்படங்களில் கறுப்புப் பணத்தை சுவருக்குள், நிலத்திற்குள்,படுக்கைக்குள் ஒளித்து வைப்பதாகக் காட்டுவார்கள். ஆனால், யதார்த்ததில் இந்தப் பணம் வெறுமனே ஒளித்து வைக்கப்படுவதில்லை. பணத்தை ஒளித்து வைப்பதால் எந்தப் பயனும் இல்லை என்று கறுப்புப் பணத்தை வைத்துக்கொண்டிருப்பவர்கள் நன்கறிவர். கறுப்புப் பணத்தை ஈட்டுவோர் முதலில் செய்வது அதை வெள்ளைப் பணமாக மாற்றுவதுதான். அடுத்து அவர்கள் செய்வது அந்தப் பணத்தை பங்குச் சந்தைகளில்,வெளிநாட்டு நிறுவங்களில், சுவிஸ் வங்கிகளில், தங்கம், நிலம் போன்றவற்றில் முதலீடு செய்வதுதான்.

 

கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற பல வழிகள் உள்ளன.  கறுப்புப் பணக்கட்டுக்கள் வெளிநாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு (கடத்தல், வெளிநாட்டு சுற்றுலாவிற்கு கொண்டுசெல்லப்படுதல் மூலம்), அதன் பிறகு வெளிநாட்டு வாழ் மக்கள் மூலம் அந்தப் பணம் மீண்டும் நமது நாட்டிற்குள் கறுப்புப்பண முதலையின் கணக்கில் அல்லது அவரது பிணாமியின் கணக்கில் முதலீடு செய்யப்படும். அவ்வாறு முதலீடு செய்ய ஏதுவாக கறுப்புப் பண முதலை அறக்கட்டளை, வணிக போலி நிறுவனங்கள் ஆகியவற்றை நடத்துவார்.  வரும் பணத்திற்கு கணக்கு எழுதும் விதமாக போலி ரசீதுக்களும்தயாரிக்கப்படும். உதாரணமாக, கர்நாடகா பெல்லாரி மாவட்த்தைச் சேர்ந்த கோடீஸ்வர்களான ரெட்டி சகோதர்கள்  சென்ற ஆண்டு, கப்பல்களில் 5000 இரும்புப் பெட்டிகளில் ஸ்டைன்லெஸ் ஸ்டீல் இரும்பை ஏற்றுமதி செய்து பணம் ஈட்டியதாக கணக்குக் காட்டினர். ஆனால், விசாரித்துப் பார்த்ததில் வெறும் 1000 இரும்புப் பெட்டிகள்தான் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தன. மீதம் 4000 இரும்புப் பெட்டிகள் ஏற்றுமதியாகாமலே அதற்கான பணம் அவரது கணக்கில் வந்துள்ளது. பாஜகவின் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நெருங்கியவர்களான ரெட்டி சகோதரர்கள் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை பாஜக அரசு மேற்கொள்ளவில்லை.

 

அதேபோல அம்பானி சகோதர்கள் எந்த பெரிய எரிபொருள் தேவையுமில்லாத சிறிய பஹாமாஸ் தீவுகளுக்கு அதிக அளவில் எரிபொருள் அனுப்புவதாக கணக்குக் காண்பித்து வருகிறார்கள். கறுப்புப் பண விவகாரங்க்களில் இது போக சிறிய நாடுகள் பகடைக் காய்களாக பயன்படுத்தப்படுவது வழக்கம் தான். நமது நாட்டில் மிக அதிகமாக முதலீடு செய்யும் நாடு எது தெரியுமா?  அமெரிக்காவோ, ரஷ்யாவோ, சீனாவோ அல்ல. மிகச்சிறிய மக்கள் தொகை கொண்ட மொரீஷியஸ் தீவுதான். வசதி படைத்தவர்கள் அங்கே மிகவும் குறைவு. அப்படி இருக்க அவர்களால் எப்படி நம் நாட்டிற்குள், வல்லாதிக்க நாடுகளைக் காட்டிலும் முதலீடு செய்ய முடிகிறது. எல்லாம், கறுப்புப் பண முதலீடுதான். இது போன்ற முதலீடுகளால் கறுப்புப் பணத்தின் அடையாளம் தொலைந்து கணக்கில் வரும் வருமானமாக அது மாறி விடுகிறது. பணத்தாள்களாக இருந்த கறுப்புப் பணம் வெள்ளயாக்கப்பட்டப் பின் வங்கி சார்ந்த முதலீடுகளாக மாறி விடுகிறது. அவை நோட்டுக்களாக இருப்பது குறைந்த காலமே. அப்படி இருக்க 500, 1000 தாள்களை இப்போது ஒழிப்பதன் மூலம் கறுப்புப் பணத்தை ஒழிக்கலாம் என்பது எப்படிப்பட்ட ஒரு கண்துடைப்பு என்பதை சொல்லி விளக்கத் தேவையில்லை.

 

தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி, அவர்கள் டிசம்பர் 30க்குள் தங்களிடம் இருக்கும் 500, 1000 ரூபாய் தாள்களையெல்லாம் வங்கியில் ஒப்படைக்க வேண்டும். நமது நட்டின் மக்கள் தொகையை வைத்துப் பார்க்கும்போது வங்கிகள் நீண்ட மக்கள் வரிசையையும் மக்கள் நெருக்கடியையும்,  குழப்பத்தையும் இது ஏற்படுத்தும். மேலும்,அந்தப் பணத்தை திரும்ப எடுப்பது குதிரைக் கொம்பானதாகவும் உள்ளது. பணத்தை மீண்டும் எடுக்க முடியாமல் பெரும்பான்மையான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தைத் தொலைக்கும் நிலையை இத்திட்டம் செயற்கையாக ஏற்படுத்தியுள்ளது.  மருத்துவச்செலவு,  திருமணம்,  பயணம் என்று பெரிய பணம் தேவைப்படும் நிலையில் இருந்தவர்கள் சொல்ல முடியாத சிரமங்களை ஏற்படுத்தியுள்ளது.  ஒரு நாளைக்கு 2000 ரூபாய்க்கு மேல் எடுக்க முடியாத நிலையில் அவர்கள் பணம் வங்கியிலேயே முடங்கும். இந்த முடக்கம் தற்செயலானதல்ல;  இப்படி மக்கள் மணத்தை வங்கியில் முடக்கவே இப்படி ஒரு திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 

 

கறுப்புப் பணத்தால் ஏற்படும் மிகப்பெரிய பாதிப்பு என்ன? 

அரசுக்கு ஏற்படும் வருமான இழப்பு தானே?  அரசுக்கு வரும் வருவாய் என்றால், அது மக்களின் பணம் தானே?  மக்கள் நலத் திட்டங்களுக்கும்,  மானியங்களுக்கும்,  அடித்தட்டு மக்களின் தொழிலுக்கான கடன் வழங்குதல்களுக்கும் செல்ல வேண்டிய பணம்தானே?

கறுப்புப் பணத்தை மீட்டு பொது மக்களின் நன்மைக்கு செலவிடப்பட்டால் அது நல்லது. ஆனால், பணமில்லா பொருளாதாரத்திற்கு வெளியே நிற்கும் (வங்கி அட்டை / கடன் அட்டை இல்லா பணப் பரிவர்த்தனை செய்வோர்)  காய்கறி வியாபாரிகள்,  சந்தைகளில் காய்கறி வாங்குபவர்கள்,  பக்கத்திலிருக்கும் மளிகைக் கடையில் அல்லது பெட்டிக்கடையில் பொருள் வாங்குபவர்கள் என  குருவி சேர்த்தாற் போல சேர்த்துவைத்திருக்கும் பணத்தை எல்லாம் பிடுங்கி பணமில்லா பொருளாதாரத்திற்குள் கொண்டுவந்து அதன் மூலம் பணப் புழக்கத்தை அதிகப்படுத்தும் முயற்சி தான் இது.

 

நாட்டின் வளத்தை சுரண்டிக் கொழுக்கும் பணமுதலைகளுக்கு எதிரான திட்டத்தை மோடி முன்னெடுக்கிறார் என்று யாரேனும் சொன்னால் அவர்களின் நோக்கத்தை நிச்சயம் சந்தேகிக்க வேண்டும். நமது வங்கிகளைக் கொள்ளையடித்த லலித் மோடிக்கள், விஜய் மல்லையாக்கள் போன்றவர்களை நாட்டை விட்டுத் தப்பித்துப்போக அனுமதித்தது இந்த அரசாங்கம். நமது வங்கிக் கட்டமைப்பை மிகப் பெரும் நெருக்கடிக்குத் தள்ளிய- திட்டமிட்டே வங்கிக் கடனைத் திருப்பித் தராத பெரு முதலாளிகளைத் தண்டிப்பதைக் கூட வேண்டாம், அவர்களின் பெயர்களை வெளியிட்டு அவர்களை அவமானத்துக்கு உள்ளாக்க கூட விரும்பாத அரசாங்கம் அவர்களுக்கு எதிராக செயல்படுகிறதாம்!! இதை நாமும் நம்பவேண்டுமாம்!!

-மதிமுகிலன்

LEAVE A REPLY