சீமான் எதற்காக ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்தார்?

0
27340
ஓ.பி.எஸ்

சீமான் பன்னீர்செல்வத்தை ஆதரித்தார் என்ற கூற்றே பிழையானது. ஆதரிப்பது என்றால், தன்வசம் இருக்கிற சட்டமன்ற உறுப்பினர்களை ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக நிற்கச் சொல்லியிருக்க வேண்டும். இல்லையென்றால், ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து வாழ்த்தாவது தெரிவித்திருக்க வேண்டும். அதுவும் இல்லை. அப்புறம் எப்படி அதனை ஆதரவு என்று வரையறுக்க இயலும்?

பன்னீர்செல்வத்தை ‘மனிதப்புனிதர் போல’ எந்த இடத்திலும் புகழவில்லை. அவர் ஆட்சிக்கு வந்தால் நல்லாட்சி மலரும் என்று ஆரூடம் சொல்லவுமில்லை. பன்னீர்செல்வம் ஒரு திராவிட அடிமை என்பதை உணர்ந்தே, ‘இருவரில் யார் வந்தாலும் தமிழர் வாழ்வில் எந்த மறுமலர்ச்சியும் ஏற்படப் போவதில்லை’ எனத் தெளிவாக உரைத்தார் சீமான். பின்னர், இருவரில் யார் குறைந்த தீமையென்று நோக்குகிறபோது, ‘பன்னீர்செல்வம் அணுகுவதற்கு எளிமையானவர்; சசிகலாவால் அவ்வாறு இருக்க இயலாது. இருவரில் பன்னீர்செல்வம் வந்தால் பரவாயில்லை’ என்றார்.

சசிகலா முதல்வரானால் ஆக்டோபஸ் கரங்கள் போல அதிகாரவர்க்கம் ஆங்காங்கே முளைத்து அது இன்னொரு ‘கருணாநிதி ஆட்சியாக’ உருவெடுக்கும் என்பதினாலே, பன்னீர்செல்வம் முதல்வராக வர வேண்டும் என விருப்பம் தெரிவித்தார். விருப்பத்திற்கும், ஆதரவிற்குமான வேறுபாட்டை உணராதவர்களாலே தேவையில்லாது இது மிகைப்படுத்தப்பட்டு, பன்னீர்செல்வத்திற்கு சீமான் ஆதரவு என்று பரப்புரை செய்யப்பட்டிருக்கிறது.

அடுத்து, ‘பன்னீர்செல்வத்தை பாஜக இயக்குவதாகச் சொன்னது பைத்தியக்காரத்தனம்’ என சீமான் சொன்னதாக வந்த ‘விகடன்’ கட்டுரையின் முழுகருத்தையும் வாசிக்காமல் தலைப்பை மட்டுமே வாசித்துவிட்டு விமர்சிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

நாளை வரும் துன்பத்தை எண்ணி இன்று துன்பத்தில் விழக்கூடாது என்பதினாலே, ‘பாஜக அடுத்த எதிரி; அதனைப் பின்னர் பார்த்துக் கொள்ளலாம்; இப்போது வீழ்த்த வேண்டியதை வீழ்த்த வேண்டும். இப்போது அதனைக் குறித்து சிந்திக்க தேவையில்லை.’ என்று கூறினார் சீமான். அதுவும் புரிதலின்மையால் தவறாகத் திரிக்கப்பட்டு, ‘சீமான் மறைமுகமாக பாஜக காலூன்றத் துணைபோகிறார்’ என அவதூறைத் தூற்றினார்கள்.

பாஜகவை சித்தாந்த ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்க்க நாம் தமிழர் கட்சியைவிட ஒரு வலிமையான கட்சி தமிழகத்தில் இருக்கிறதா? பாஜகவின் இந்துத்துவா தத்துவத்திற்கு நேரெதிர் தத்துவம் கொண்ட ஒரே கட்சி, நாம் தமிழர் கட்சி மட்டும்தான். இன்று ‘மதச்சார்பின்மை’ என்று பேசும் திமுக, அதிமுக, மதிமுக, தேமுதிக, பாமக என எல்லாக் கட்சிகளும் மதவாத பாஜகவோடு கூட்டணி வைத்தக் கட்சிதான்! ஆனால், நாம் தமிழர் கட்சியோ, ‘காங்கிரஸ் கட்சி ஈழத்தமிழர்களுக்கும், தமிழகத்தமிழர்களுக்கும் மட்டும்தான் எதிரி. ஆனால், பாஜக உலகிலுள்ள ஒவ்வொரு தமிழனுக்கும் எதிரி’ என பேரறிவிப்பு செய்து, இந்துத்துவாவை சமரசமின்றி எதிர்த்து வருகிறது.

2014ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் மோடியை வளர்ச்சியின் நாயகனாக முன்னிறுத்தி எல்லோரும் அவரை ஆதரித்தபோதும், இன்றைக்கு ‘மாற்று அரசியல்’ பேசுகிறவர்களெல்லாம் பாஜகவோடு கூட்டணி சேர்ந்தபோதும் மோடியின் குஜராத் இனப்படுகொலையையும், வாடகைத்தாய்மார்கள் வாழும் பின்தங்கிய மாநிலம் குஜராத் என்ற உண்மை நிலையையும், மோடியின் கார்ப்பரேட் மூளையையும், பிழையானப் பொருளாதாரக்கொள்கையையும் தேர்தல் பரப்புரையில் மக்கள் மத்தியில் எடுத்துரைத்தவர் சீமான் மட்டும்தான். ‘சீமானை தேசவிரோதச் சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும்’ என எச்.ராஜா, சுப்ரமணியசாமி போன்றவர்கள் அவ்வப்போது முஷ்டி முறுக்குவதென் பின்னணி இதுதான். எல்லோரும் இசுலாமியர்களையும், கிருத்துவர்களையும் சிறுபான்மையினர் என்றபோது, ‘அவர்கள் சிறுபான்மையினர் அல்லர்! அவர்கள் பெரும்பான்மை தமிழ்த்தேசிய இனத்தின் மக்கள்; மண்ணின் பூர்வக்குடிகள்’ என்று முரசறிவித்ததும் சீமான்தான். அதனால், இந்துத்துவாவின் அபாயம் குறித்து நாம் தமிழர் கட்சிக்கு வகுப்பெடுக்கிற வேலை வேண்டாம்.

இன்றைக்கு முதல்வர் பதவிக்கான ‘இசை நாற்காலியில்’ எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஓடுகிறார்கள். பழனிச்சாமிக்குச் சாதகமாக நிலையிருந்தாலும் ஆளுநர் மௌனம் சாதித்து வருகிறார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சீமான், ‘மறுதேர்தலை நடத்துவதுதான் உகந்ததாக இருக்கும். யார் முதல்வர் என்பதை மக்களே முடிவு செய்யட்டும். அதுவே உண்மையான மக்களாட்சி’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மறுதேர்தல் உடனடியாக நடத்தப்படுமானால் அதனை எதிர்கொள்வதற்குத் தேவையான பொருளாதாரப்பலம் நாம் தமிழர் கட்சியிடம் இருக்கிறதா? என்றால், சத்தியமாக இல்லை. ஆனாலும், சீமான் மறுதேர்தலை நடத்தக் கோருகிறார் என்றால், தனிப்பட்ட இலாப, நட்டக் கணக்குகளைவிட சனநாயகத்தைக் காப்பது அவசியம் என்றுதான். அதனால், சீமான் தெளிவாகவே இருக்கிறார். அவருக்குப் பாடமெடுக்கிற வேலையை எவரும் செய்ய வேண்டாம்.

 

LEAVE A REPLY