தனுஷின் கொடி திரைப்படம் – விமர்சனம்

0
774

இரட்டையர்களான அண்ணன், தம்பி மற்றும் அண்ணனின் காதலி இவர்களுக்கிடையே நிகழும் அரசியல் ஆட்டம்தான் படத்தின் கதைக்கரு.

 

எதிர்க்கட்சியான சனநாயகக் கழகத்தின் தீவிரத் தொண்டர் முருகனுக்கு கொடி, அன்பு என இரட்டைக்குழந்தைகள்; அதில் மூத்த மகன் கொடியை கட்சிக்கே முழுமையாகத் தாரைவார்க்கிறார். தந்தை முருகன், தொழிற்சாலையொன்றின் பாதரசக்கழிவை அகற்றக்கோரி தீக்குளித்து இறக்கிறார். இதனால், முழுநேர அரசியல்வாதியாகிறார் முருகனின் மூத்த மகன் கொடி. அவரும், ஆளுங்கட்சியான குடியரசுக்கழகத்தின் பேச்சாளர் ருத்ராவும் காதலிக்கிறார்கள். அரசியல்ரீதியாக முரண்பட்டாலும், தங்களது வாழ்க்கையில் அதனை நுழைக்காத புரிதலோடு இருக்கிறார்கள். கொடியின் தம்பியான அன்பு ஒரு கல்லூரியின் ஆசிரியர். சாதுவாக இருக்கும் அன்பு அம்மாப் பிள்ளையாக வளர்கிறார்.

இதற்கிடையே, பொள்ளாச்சி தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிறது. அதில் தனது அரசியல் சாணக்கியத்தனத்தைப்(!) பயன்படுத்தி ஆளுங்கட்சியின் வேட்பாளராகிறார் ருத்ரா. விதியின் வசத்தால் எதிர்க்கட்சியின் வேட்பாளராக கொடி நிறுத்தப்படுகிறார். ஆனாலும், வெற்றிபெற்றாக வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு காய்நகர்த்துகிறார் ருத்ரா. இதனால் அன்பு அரசியலுக்கு வர நேரிடுகிறது. ருத்ரா என்ன செய்தார்? அன்பு ஏன் அரசியலுக்கு வந்தார்? கொடி என்ன ஆனார்? என்பதற்கான விடைதான் ‘கொடி’ படத்தின் திரைக்கதை.

கொடி, அன்பு என இரு வேடங்களில் தனுஷ், ருத்ராவாக த்ரிஷா, கொடியின் அப்பா முருகனாக கருணாஸ், அம்மாவாக சரண்யா பொன்வண்ணன், அன்புவின் காதலியாக அனுபமா, ஆளுங்கட்சியின் தலைவராக விஜயகுமார், எதிர்க்கட்சியின் தலைவராக எஸ்.ஏ.சந்திரசேகரன் என ஒரு நட்சத்திரப் பட்டாளமே களமிறங்கியிருக்கிறது.  இரட்டையர் வேடம் என்பதால் இரு வேடங்களுக்கும் வித்தியாசம் காட்ட தாடியும், கூலிங் கிளாசுமே தனுஷ்க்கு போதுமானதாக இருக்கிறது. முட்டை விற்கும் அனுபமாவிடம் அடிவாங்கும் அப்பாவி, அடியாட்களைகூட அடித்து நொறுக்கும் அரசியல்வாதி என இரு வேடங்களிலும் முத்திரை பதித்திருக்கிறார் தனுஷ். த்ரிஷாவுக்கு தனுஷ்க்கு நிகரான கதாபாத்திரம்; பெண் ‘அமாவாசையாக’ கலக்க வேண்டிய கதாபாத்திரத்தை ஓரளவு சமாளித்திருக்கிறார். அனுபவமாவுக்கு வழக்கமான தமிழ் சினிமா ஹீரோயின் வேலைதான். எஸ்.ஏ.சி., விஜயகுமார் பொருத்தமானத் தேர்வு; சரண்யா பொன்வண்ணன் வழக்கமான அம்மாவாக நடித்திருக்கிறார். கருணாஸ், காளி வெங்கட் உள்ளிட்டோரும் தங்களது பணியை செவ்வனே செய்திருக்கிறார்கள்.

சந்தோஷ் நாராயணனின் இசையில், ‘ஏய் சுழலி’ பாடல் இனிக்கிறது. பின்னணி இசை படத்திற்கு பலம்சேர்க்கிறது. படத்தைப் பொறுத்தவரை தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் படம் என்பதாலும், அரசியல் படம் என்பதாலும் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், அதனை ஓரளவே நிறைவேற்றியிருக்கிறார் இயக்குனர். முதல் பாதியில் திரைக்கதையில் இருக்கும் வேகம் ஏனோ இரண்டாம் பாதியில் இல்லை. எளிமையாக யூகிக்கக்கூடிய பின்பாதி திரைக்கதை படத்தின் பலவீனம். ‘எதிர்நீச்சல்’ படத்தில் திரைக்கதையின் பின்பாகத்தில் வேகம்கூட்டிய துரை.செந்தில்குமார் இதில் கொஞ்சம் தவறவிட்டிருக்கிறார். கொடைக்கானல் பாதரக்கழிவுகளை நினைவுபடுத்தும்விதத்திலும், ஒரு பிரச்சினையில் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் செய்யும் தகிடுதத்தங்களைக் காட்டி சமகால அரசியலை மறைமுகமாக சொல்லுமிடத்திலும் இயக்குனரைப் பாராட்டலாம். மொத்தத்தில், கொடி கொஞ்சம் பறக்கத்தான் செய்கிறது.

LEAVE A REPLY