மண்டைவோட்டுடன் டெல்லியில் போராடுகிறான் விவசாயி : சீறும் சீமான்!

0
1714

நடைபெறவிருக்கின்ற இராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக மூத்த கம்யூனிசவாதி காசி உதயம் அவர்களின் மகனும், தமிழ்த்தேசியத் தளத்தில் நின்று கால்நூற்றாண்டு போராடியவரும், தமிழன் தொலைக்காட்சியின் நிறுவனருமான கா.கலைக்கோட்டுதயம் அவர்கள் போட்டியிடுகிறார்கள். நாளை (22-03-17) வேட்புமனு தாக்கல் நடைபெறுகிறது.  நாளை மறுநாள் (23-03-17)  வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டத்தை இராதாகிருஷ்ணன் நகரில் நடைபெறுகிறது.

இராதாகிருஷ்ணன் நகர் தொகுதியின் இடைத்தேர்தலில் போட்டியிடும்  நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கா.கலைக்கோட்டுதயம் அவர்களை அறிமுகம் செய்வித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசியதாவது,

இராதாகிருஷ்ணன் நகரில் பெரும்பிரச்சினையாக குடிநீர் பிரச்சினை இருக்கிறது. இதனால், தண்ணீருக்காக நீண்டநேரம் காத்திருக்கிற நிலை அங்கு வசிக்கிற எமது தாய்மார்களுக்கும், தங்கையர்க்கும் இருக்கிறது. எமது கட்சியின் ஆட்சியின் செயல்பாட்டு வரைவிலே, உள்நாட்டிலேயே தண்ணீர் வளத்தில் தன்னிறைவு பெற்று, தரமான குடிநீர் அனைத்து மக்களுக்கும் கிடைப்பதை உறுதிசெய்வோம் என்று குறிப்பிட்டோம். மழைநீரைச் சேமிக்க வேண்டும் என்று மக்களை வலியுறுத்துகிறது தமிழக அரசு. ஆனால், அரசு இதுவரை எவ்வளவு மழைநீரை சேமித்திருக்கிறது? என்று கேட்டால் பதிலில்லை. 100 ஆண்டுகளுக்குத் தேவையான மழை பெய்திருக்கிறது என்கிறார்கள். ஆனால், 10 மாதங்களுக்குத் தேவையான தண்ணீரைக்கூட இவர்கள் சேமிக்கவில்லை. இருந்த ஏரிகள், குளங்களையெல்லாம் ஆக்கிரமித்துவிட்டார்கள். மிச்சம்மீதி இருக்கிற இருப்பவற்றையாவது ஆழப்படுத்தி, நீரைச் சேமிக்கலாம். அதனைச் செய்யாதுவிட்டுவிட்டு மலைகளைக் கல்குவாரியாக்கி, அதன் குழிகளில் உள்ள அசுத்தமான நீரைக் குடிநீருக்குப் பயன்படுத்துகிற நிலைக்கு மக்களைத் தள்ளியிருக்கிறார்கள்.

மனிதனின் அத்திவாசியத் தேவையாக இருப்பவை கல்வியும், மருத்துவமுமாகும். அவை அனைத்து மக்களுக்கும் சரியான, சமமான அளவில் கிடைக்க வேண்டும் என்பதுதான் எங்களது கனவு. தரமான சாலை வசதி, தடையற்ற மின்சார வசதி, அனைவருக்கும் இலவசக் கல்வி, தரமான மருத்துவம், அனைவருக்கும் தகுதிக்கேற்ற வேலை, வேலைக்கேற்ற ஊதியம் என தங்களின் பொருளாதாரத் தேவையைத் தாங்களே நிறைவேற்றிக் கொள்கிற நிலையில் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதுதான் நாம் தமிழர் ஆட்சியினுடைய முதன்மையாக நோக்கமாகும்.

விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு சாகிறார்கள். இந்தியாவின் தலைநகரான டெல்லியில் மண்டைவோட்டுடன் போராடுகிறார்கள். அதனைக் கவனித்து அவர்களின் குறைகேட்க ஆளில்லை. உழவர் இல்லையேல் உணவு இல்லை; உணவு இல்லையேல் உயிர்கள் இல்லை; உயிர் இல்லையேல் உலகு இல்லை. இதனைத்தான், ‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்’ என்கிறார் வள்ளுவப்பெருந்தகை.

போராடிபெற்ற சுதந்திரத்தையும், மாண்புமிக்க சனநாயகத்தையும் பணநாயகமாக மாற்றி நிறுத்தியிருப்பதைப் பார்க்கிறோம். அதனால், தேர்தல் ஆணையம் சீர்திருத்த நடவடிக்கைகளை கொண்டு வர வேண்டும். தஞ்சாவூரிலும், அரவக்குறிச்சியிலும் அதிகப்படியாக பணம் கொடுத்துவிட்டதாகச் சொல்கிறார்கள். அப்படியானால், குறைந்தளவு பணத்தைக் கொடுத்தால் குற்றமில்லையா? என்று கேட்டால் பதிலில்லை. தஞ்சாவூரிலும், அரவக்குறிச்சியிலும் பணம் கொடுக்கப்பட்டுவிட்டதாகச் சொன்ன தேர்தல் ஆணையம், ஏன் பணம் கொடுத்தவர்களைக் கைதுசெய்து நடவடிக்கை எடுக்கவில்லை? பறக்கும் படையானது, ‘வாக்குக்குப் பணம் கொடுப்பது குற்றம்; ஓராண்டு சிறைத்தண்டனை’ என்று வெறுமனே பதாகை வைப்பதைவிட்டுவிட்டு, வாக்குக்குப் பணம் பெறுபவர்களையும், கொடுப்பவர்களையும் கைதுசெய்து சிறைப்படுத்தினால்தான் வாக்குக்குப் பணம் கொடுக்கிற இழிவானநிலை ஒழியும்.

 

 

 

 

 

 

LEAVE A REPLY