மனசாட்சிக்குப் பயந்த மனிதன் ஓ.பி.எஸ் : சீமான் கருத்து!

0
19962
ஓ.பி.எஸ்

நேற்று (07-02-2017) இரவு 9 மணியளவில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலிதாவின் நினைவிடத்திற்கு சென்ற முதல்வர் பன்னீர்செல்வம் 40 நிமிடங்களுக்கும் மேலாக அங்கு அமைதியாக அமர்ந்திருந்தார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் தான் கட்டாயத்தின் பேரில் தான் முதல்வர் பதவியில் இருந்து விலகியதாகவும், சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளராக்க தன்னை வற்புறுத்தினார்கள் என்றும் கூறி சசிகலாவை முன்னிறுத்துவதற்கு தனது எதிர்ப்பினை பகிரங்கமாகப் பதிவு செய்தார்.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளாவதாவது,

தமிழக அரசியலில் என்ன நடக்கிறதென்றே தெரியாத ஒரு குழப்பம் நீண்டகாலமாக நீடித்து வந்தநிலையில் மாண்புமிகு தமிழக முதல்வர் மதிப்பிற்குரிய ஐயா பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்திருக்கும் கருத்துகள் மூலம் பல்வேறு திரைமறைவு செயல்கள் இங்கு அரங்கேறியிருப்பது நமக்கு தெரியவருகிறது. முதல்வரின் நேர்காணல் மனசாட்சிக்கு பயந்த ஒரு மனிதனாகத்தான் அவரை நமக்குக் காட்டுகிறது. மற்றவர்களைப்போல பதவி கிடைக்கும் என்று அனுசரித்து போகாமல் உண்மையை மக்களுக்கு சொல்லிவிடவேண்டும் என்று அவர் நினைத்திருக்கிறார். அவருக்குப் பின்னால் இருந்து பாஜக இயக்குகிறது; மற்ற கட்சிகள் இயக்குகிறது என்பதை நான் ஏற்கவில்லை. மற்ற ஒரு கட்சியால் அவரை இயக்கிவிடமுடியும் என்று நான் நம்பவும் இல்லை. அப்படி ஒரு கட்சி இயக்கினாலும் ஐயா பன்னீர்செல்வம் அவர்கள் எழுப்புகிற நியாயமானக் கேள்விகளுக்கு பதில் இருக்கிறதா என்று பார்க்கவேண்டும். தான் கட்டாயத்தின் பேரில்தான் பதவி விலகினேன் என்பதையும், சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளராக்க தன்னை வற்புறுத்தினார்கள் என்பதையும் பாஜக சொன்னதாக ஐயா பன்னீர்செல்வம் கூறவில்லையே! தன் கட்சியில் இருப்பவர்களே தன்னைத் தேர்வுசெய்துவிட்டு தனிப்பட்ட முறையில் தனக்கு மட்டும் அவமானம் ஏற்படுத்தாமல் தான் வகிக்கும் பதவிக்கே களங்கம் விளைவிப்பதாகதான் அவர் குற்றஞ்சாட்டுகிறார். எனவே, எதற்கும் ஆசைப்படாத எளிமையான ஒருவரை மற்ற கட்சிகள் பின்னால் இருந்து இயக்குகிறது என்பதை என்னால் ஏற்கமுடியவில்லை. இந்த இக்கட்டான நேரத்திலாவது உண்மையைப் பேசினார் என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும். அவர் மனசாட்சிக்கு பயந்து மக்கள் மன்றத்தில் உண்மையை வெளிப்படுத்தியுள்ளார். அப்படித்தான் நான் பார்க்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY