முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம்? – சீமான் எழுப்பும் சந்தேகங்கள்

0
813

10-12-2016 அன்று சென்னை, காமராசர் அரங்கத்தில் நடைபெற்ற இனியவளே உனக்காக புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

அப்போது சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக ஆவது குறித்து எழுப்பட்ட வினாவிற்கு பதிலளித்த சீமான் “அதிமுகவின் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுப்பது அக்கட்சியின் முடிவு உரிமை!
மற்ற கட்சிகளின் உள்விவகாரங்களில் நாம் கருத்து கூற இயலாது!” என்று தெரிவித்தார்.

மேலும் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சீமான் இதுகுறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருக்கிறார்;

அம்மையார் ஜெயலலிதா அவர்களின் மரணம் குறித்து பல கேள்விகளும், சந்தேகங்களும் எழுகிறது.
‘ஜெயலலிதா முற்றிலும் குணமடைந்து விட்டார்; அவர் எப்போது விரும்புகிறாரோ அப்போது வீட்டுக்குச்
செல்லலாம்’ என அப்பல்லோ நிறுவனத்தின் தலைவர் பிரதாப் ரெட்டி கூறியிருந்தார். ஆனால், அதற்கு
மாறாக திடீரென ஜெயலலிதா மரணமடைந்தார். அப்படியானால், முற்றிலும் குணமாகியிருந்த
ஜெயலலிதா திடீரென உயிர் போகுகிற அளவுக்குப் பலவீனப்பட்டு போனது ஏன்? அவர் நன்றாகப்
பேசிக்கொண்டிருந்தார் என்கிறார்கள் அப்பல்லோ மருத்துவர்கள். அப்படிப் பேசினார் என்றால்,
ஜெயலலிதாவுக்காக அவரது தொண்டர்கள் மண்சோறு சாப்பிட்டுக்கொண்டு, மொட்டை அடித்துக்கொண்டு வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொண்டிருந்தபோது மழைவெள்ளத்தின்போது பகிரியில் (வாட்ஸ்அப்) பேசச் செய்ததைப் போன்றே அவரைப் பேசச் செய்திருக்கலாமே, அதனை ஏன் செய்யவில்லை? என்ற கேள்விகள் இயல்பாய் எழுகிறது.

நல்ல உடல்நலத்துடன் சட்டசபையில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பியவர் திடீரென நள்ளிரவில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன்பிறகு, ராஜாஜி அரங்கத்தில் அவரை சடலமாக, உயிரற்ற உடலாகத்தான் பார்க்க நேர்ந்தது. இடையில் மருத்துவமனையில் என்ன நடந்தது என யாருக்கும் தெரியவில்லை. அதுவும், ஜெயலலிதா இறந்த சில மணி நேரங்களிலே ஓ.பன்னீர்செல்வம் முதல்வராகப் பொருப்பேற்கிறார்.

அப்படி அவசர அவசரமாக பொருட்பேற்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? அண்ணா இறந்தபோது அவரை அடக்கம் செய்தபிறகுதான், முதல்வராக கலைஞர் பொருட்பேற்றார். எம்.ஜி.ஆர். இறந்தபோது இடைக்கால முதல்வராக நெடுஞ்
செழியனை அறிவித்து, பிறகுதான் முதல்வரைத் தேர்ந்தெடுத்தார்கள். ஆனால், அந்த நடைமுறை எதுவுமே தற்போது பின்பற்றப்படாதது ஏன் என்று புரியவில்லை. சிறைக்குள் அம்மையார் இருந்தபோது தேம்பி தேம்பி அழுது பதவியேற்ற
அமைச்சர்கள், அம்மையார் இறந்துகிடக்கிறபோதும் துளித்துயரமுமற்று, சலனமில்லா முகத்தோடு பதவியேற்றதை நம்மால் நம்ப முடியவில்லை. 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்தபோது பெரும்பான்மையான நாட்கள் திரவ உணவையே உட்கொண்டார் என்கிறார்கள். ஆனால், அவரது உடல் எடை சிறிதும் குறையவேயில்லையே எப்படி
அது சாத்தியம்? 68 வயதான அந்தப் பெண்மணி 75 நாட்களுக்கு மேலாக மருத்துவமனையில் இருந்தபோதும்
தலைமுடி கருமையாக இருக்கிறதே அது எப்படி அவ்வாறிருக்கும்? அம்மையாருக்கு மருத்துவமனையில்
மருத்துவம் செய்துகொண்டிருந்தார்களா? இல்லை! தலைக்கு மை அடித்துக் கொண்டிருந்தார்களா?.

அம்மையார் உயிரோடு இறந்தபோது ஜி.எஸ்.டி. மசோதா, உணவுப்பாதுகாப்புச் சட்டம், உதய் திட்டம், நீட் தேர்வு ஆகியவற்றை முழுமையாக எதிர்த்தார்கள். ஆனால், இது நான்கும் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது எப்படி
கையெழுத்தானது? இப்படி இதில் பல்வேறு கேள்விகளும், சந்தேகங்களும் எழுகிறது. ஆனால், அதற்குப் பதில் சொல்வதற்குத்தான் ஆளில்லை. இறந்து போன அம்மையார் ஜெயலலிதாவை வெறுமனே தனியொரு மனிதராக பார்க்க முடியாது; அவர் 8 கோடி மக்களுக்கும் முதல்வராக இருந்தவர். அதனால், அவருக்குத் திடீரென்று நிகழ்ந்த மரணம்குறித்து கேள்விகேட்க ஒவ்வொருவருக்கும் உரிமையிருக்கிறது என்றார் சூடாக.

இனியவளே உனக்காக புத்தக வெளியீட்டு விழா

LEAVE A REPLY