வைரமுத்து மீது தவறு இருந்தால் சட்டப்படி அணுகாமல், பொதுவெளியில் எழுதி களங்கம் ஏற்படுத்துவதுதான் நோக்கமா? – சீமான் கேள்வி

0
502

வைரமுத்து மீது தவறு இருந்தால் சட்டப்படி அணுகாமல், பொதுவெளியில் எழுதி களங்கம் ஏற்படுத்துவதுதான் நோக்கமா? – சீமான் கேள்வி  | தீ – செய்திகள்

தமிழ்நாடு என்று பெயர் வைக்கக்கோரி 76 நாட்கள் பட்டினிப் போராட்டம் இருந்து உயிர்நீத்த பெருந்தமிழர் ஈகி சங்கரலிங்கனார் அவர்களினுடைய 62ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 13-10-2018 சனிக்கிழமை காலை 10 மணியளவில், சென்னை கிண்டி, தியாகிகள் நினைவிடத்திலுள்ள அவரது திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்சீமான் அவர்கள் மாலை அணிவித்து மலர்வணக்கம் செய்தார்.

உடன் நாம் தமிழர் கட்சியின் மாநில, மண்டல, தொகுதிப் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் திரளாகப் பங்கேற்றனர்.

பின்னர் கவிப்பேரரசு வைரமுத்து மீதான பாடகி சின்மயி எழுப்பியுள்ள பாலியல் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு சீமான் பதிலளிக்கையில்,

பிரபலங்களை அநாகரீகமாகப் பேசுவது நாகரீகமாகி வருகிறது என்கிற கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் கூற்று ஏற்கத்தக்கது. நாங்கள் கவிப்பேரரசு வைரமுத்துவைப் பெருமைக்குரிய அடையாளமாக கருதுகிறோம். அத்தகைய அடையாளத்தை இழிவுப்படுத்தவும், சிதைக்கவும் எவரேனும் முற்பட்டால் அதனைத் தற்காத்து காப்பாற்ற வேண்டும் எனத் துடிப்பது எங்கள் இயல்பு! 

வைரமுத்து மீது சகோதரி சின்மயி எழுப்பியக் குற்றச்சாட்டையும் ஆண்டாள் பிரச்சினையையும் இணைக்கும் பாஜகவின் நோக்கம், திட்டமிட்டு அவரை அவமானப்படுத்துவதற்காகத்தான் என எண்ணத் தோன்றுகிறது. 8 வயது சிறுமி ஆசிஃபாவைக் கோயில் கருவறையில் வைத்துப் பாலியல் படுகொலை செய்தபோது கண்டிக்காத பாஜகவினருக்கு இதனைப்பற்றிப் பேசத் தகுதியோ, உரிமையோ இல்லை. ஒரு பெண்ணை நிர்வாணப்படுத்தித் தெருவில் பாஜகவினர் அடித்து உதைக்கும் காட்சி வெளியானபோது கதறித் துடித்திருந்தால் ‘பாரத் மாதா கி ஜே’ என முழக்கமிடுவதற்குத் தகுதியுடையவர்களாக இருந்திருப்பார்கள். கர்நாடக பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் அமர்ந்துகொண்டு பாலியல் படங்கள் பார்த்தபோது கண்டித்திருந்தால் இப்போது இதைப்பற்றி பேசத் தகுதியும், நேர்மையும் இருந்திருக்கும்.  இவற்றிற்கெல்லாம் மௌனமாக இருந்துவிட்டு வைரமுத்து பிரச்சினையில் வேகமாகத் தலையிடுவது நம்மை சந்தேகிக்க வைக்கிறது. வைரமுத்து தவறு செய்திருந்தால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். தவறு செய்திருந்தால் தண்டிக்கப்படுவதில் நமக்குப் பிரச்சினையில்லை! அதை விட்டுவிட்டு வெறும் ட்விட்டரில் எழுதுவதன் மூலம் களங்கம் ஏற்படுத்துவதுதான் இவர்கள் நோக்கமாக இருக்கிறது என்பதுதான் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

MeToo என்ற அமைப்பை நாம் முழுவதுமாக குறைகூறவில்லை; பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகளைப் பதிவிடும்போது சமூக விழிப்புணர்வு ஏற்படுகிறது. ஆண்கள் பெண்களை அச்சுறுத்த அச்சப்படுவார்கள் என்பது உண்மை! ஆனால், அதேநேரத்தில் இதனைக் கொண்டு யாரும் யாரையும் எளிதில் பழி சுமத்திவிட முடியும் என்பதும்  உண்மையே! குற்றம் சுமத்தப்படுபவர் தன்னை நிருபிப்பதற்குள் அனைவரும் அதுபற்றி விவாதித்து அவரை அவமானப்படுத்தி முடித்துவிடுவார்கள். இதனால், தற்கொலைகள்கூட நிகழும் பேராபத்து உள்ளது.

இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

LEAVE A REPLY